முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தொகுதி மறுவரையறை தீர்மானம்:

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுவரையைற செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாகவும், இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும், அந்த தீர்மானத்தில் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாக தொடர்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும், மக்களவை, மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியிருப்பதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தம்:

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்திருத்ததின் பின்னணியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முதலமைச்சர், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அரசியலமைப்பின் 81(2) (அ) சட்டப்பிரிவை பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் 1967ல் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை 41ல் இருந்து 39 ஆக குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்ற பேரவையில் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெரும் அநீதி:

மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு 1971ம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானத்தின் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது;

1. மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

2. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலே நிரந்தரமாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான இடப்பகிர்வு முறை தொடர வேண்டும்.

3. எதிர்வரும் மக்களவைப் பொதுத்தேர்தல்களிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதுதொடர்பான உரிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article