தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் விஜய். திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவரது திரை புகழ் அவர் ஆட்சிக்கட்டிலில் அமர பெரும்பங்கு வகித்தது.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்:

குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படத்தில் விஜய் அறிமுகமானாலும், நாளைய தீர்ப்பு படம் மூலமாக அவர் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், அவரது திரையுலக வளர்ச்சிக்காக உறுதுணையாக நின்றவர் மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்.

விஜய் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து விஜய்யை தமிழ்நாடு முழுவதும் அறியச் செய்தார். ஜெயலலிதா, கருணாநிதி காலத்திலே அரசியல் கட்சி தொடங்கிய 2011ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை தேமுதிக-வை அமரச் செய்தவர் விஜயகாந்த்.

கேப்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட தேமுதிக-வினரும், விஜயகாந்த் தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?

இந்த சூழலில், விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்துவாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயகாந்தின் உடல்நலக்குறைவிற்கு பிறகே தேமுதிக பலவீனமடைந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு அளித்தனர்.

தவெக பொதுக்கூட்டம் ஒன்றிலும் விஜய் தன்னை செந்தூரப்பாண்டி தம்பி என்று பெருமிதமாக கூறியிருப்பார். விஜயகாந்தின் மறைவின்போதும் நேரில் சென்று கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

விஜய் குடும்பத்திற்கு முக்கியமானவர்:

செந்தூரப்பாண்டியின் தம்பி என்று விஜய்க்கு அடைமொழி அளித்தும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விஜயகாந்த் மீது பெரும் மரியாதையும், அன்பும் கொண்டிருந்தவர். சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், சாட்சி, செந்தூரப்பாண்டி என பல படங்களை இயக்கியுள்ளார்.

எஸ்ஏ சந்திரசேகரின் ஆரம்ப கால பல படங்களில் விஜயகாந்த்தே கதாநாயகனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தவெக-வைத் தொடங்கிய பிறகு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று பிரேமலதா மற்றும் அவர்களது மகன்களை நேரில் விஜய் சந்தித்தார். முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் என அனைத்து தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். ஆனால், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா-வை மட்டும் அவர் நேரில் சென்று சந்திக்கவில்லை. இந்த சூழலில், நாளை விஜய் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Source: Read Full Article