CM Vijay On Delimitation: தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டிட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டம்:

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மநீம ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

”தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்” - CM விஜய்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு கூட்டத்தில் கடைசியாக பேசிய முதலமைச்சர் விஜய், “தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்” கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னது என்ன?

கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே. ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாரளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் எடுத்துரைத்தனர். தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் ஒன்றிய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும் தற்போதுள்ள நிலையே தொடரவும் தமிழ்நாட்டின் உரிமையினை நாடாளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல் வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த மத்திய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

மேலும் 2026-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2) (a)-கீழ் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால் சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர். மக்கனவை : மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

DMKவிற்கு செக்?

தவெகவை மாநிலத்தில் எதிர்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜகவுடன் சமாதானமாக செல்ல திமுக பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக தொகுதி மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகிதம் வரை தொகுதிகளை உயர்த்தலாம் என்ற திருத்தத்தை உறுதிபடுத்த திமுக தரப்பு வலியுறுத்தியதகாவும் பேசப்படுகிறது. ஆனால், அத்தகைய ஆசை வார்த்தைகளை எல்லாம் கூறி, ஏமாற்றும் மத்திய அரசை நம்பக் கூடாது என முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த காரணத்தை குறிப்பிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்தாலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டதாக முத்திரை குத்த தவெக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

Source: Read Full Article