காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்கீழ் 11 மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 25-க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டி இயங்கி வருகின்றன. இந்த மின் நிலையங்களுக்கு சுங்குவார்சத்திரம் மற்றும் ஆரிய பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட உயர் அழுத்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சாதாரண சூழ்நிலைகளில் ஒரு துணை மின் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மற்றொரு துணை மின் நிலையத்திலிருந்து மாற்று வழித்தடம் மூலம் மின் விநியோகம் சீராக வழங்கப்படும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மின்வாரியம் பெரும்பாலான இடங்களில் அமைத்துள்ளது.

ஆனால், வாலஜாபாத் மற்றும் ஓரிக்கை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு இதுபோன்ற மாற்று வழித்தட வசதிகள் சரிவர இல்லாத நிலை நீடித்து வந்தது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் எதிர்பாராமல் மின் தடை ஏற்படும் நேரங்களில், சீரமைப்பு பணிகள் முடியும் வரை பல மணி நேரம் மின்சாரம் இன்றி பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கிராமப் பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

ரூ.35 லட்சத்தில் மாற்று வழித்தடத் திட்டம்

இப்பிரச்சனைக்கு தீர்வுகாண புதிய வழித்தடம் அமைக்க வேண்டுமெனில், சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில எடுப்பு செய்து, புதிய மின் கம்பங்களை நட்டு மின் பாதை அமைக்க வேண்டும். அதற்கு தோராயமாக ரூ.3 கோடி வரை செலவாகும். தற்போது மின்வாரியம் நிதி நெருக்கடியில் உள்ள சூழலில், ஒரே ஒரு துணை மின் நிலையத்திற்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்வது சாத்தியமற்ற ஒன்றாகும்.

எனவே, இந்த செலவினத்தைக் குறைக்கும் வகையில், சங்கராபுரத்திலிருந்து புளியம்பாக்கம் வழியாக வாலஜாபாத் துணை மின் நிலையத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இல்லாமல் முடங்கிக்கிடக்கும் பழைய மின் வழித்தடத்தைக் கண்டறிந்து, அதை தூசி தட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தடையற்ற மின்சாரமும் குறைந்த அழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வும்

பயன்பாடின்றி உள்ள இந்த மாற்று வழித்தடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூ.35 லட்சம் நிதியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டிற்கு அரசு மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டவுடன், சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, வாலஜாபாத் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கும். மேலும், அப்பகுதிகளில் நீண்டகாலமாக இருந்து வரும் குறைந்த மின் அழுத்தப் (Low Voltage) பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article