தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கண்ணாடி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று, மிதவைக் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு, அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிதவைக் கண்ணாடி (Float Glass), பூசப்பட்ட கண்ணாடி (Coated Glass), லேமினேட் செய்யப்பட்ட கண்ணாடி (Laminated Glass) மற்றும் தீ-எதிர்ப்பு, உயர்-பாதுகாப்பு கொண்ட கண்ணாடி உற்பத்தி குறித்து அந்நிறுவன உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் கண்ணாடி உற்பத்திப் பொருட்களைக் கையாளும் பகுதியினைப் பார்வையிட்ட பின்னர், ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து, வேலைவாய்ப்பு வழங்குவதற்காக செயின்ட் கோபைன் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சமூக முன்னெடுப்பான 'கற்றுக்கொண்டே சம்பாதிப்போம்' பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடி, Learn While Earn (LWE) மற்றும் Nettur Technical Training Foundation (NTTF) இணைந்து, அப்பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளவும், பட்டயம் பெறவும், இந்நிறுவனத்திலேயே பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதற்குமான வழிவகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அந்நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையம், நகர்ப்புறக் காடு வளர்ப்பு, வண்ணத்துப்பூச்சித் தோட்டம் போன்ற இயற்கை நிலைத்தன்மை முன்னெடுப்புகள் மற்றும் 4.0 தொழில் புத்தாக்கச் சிறப்பு மையம் குறித்தும் அந்நிறுவன உயர் அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் விளக்கினார்.

ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலை

ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர், தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான உதிரி பாகங்களைக் கொண்டு பொருத்தும் பிரிவு, தரம் உறுதிப்படுத்தும் பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட சோதனைப் பாதைக்கான (Long Test Track) புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தைத் தாமாகவே முன்வந்து அவ்வளாகத்தில் உள்ள தடம் 3 மற்றும் 4 வழியாக இயக்கி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சர் ச.கீர்த்தனா, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ. முனிரத்தினம், எம். ஹரிஷ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Source: Read Full Article