கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று.

ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டின் ஒரு பகுதியாக பகவதி சேவை மற்றும் கலச வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. மாதாந்திர வழிபாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (ஆக.21) இரவு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் (சிங்கம்) ஆவணி மாத வழிபாட்டுக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தில் உள்ள மாளிகாபுரத்தம்மன் கோயிலில் பகவதி சேவை எனும் பாரம்பரிய வழிபாடு சடங்கு நடைபெற்றது.

மேல்சாந்தி மனு நம்பூதிரி தலைமையிலான குழுவினர் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் பெரிய அகல்விளக்கை அம்மனாக பாவித்து மலர்களால் அலங்கரித்து மந்திரங்கள் ஓதி தீபாராதனை வழிபாடாக நடைபெற்றது. இதே போல் சபரிமலை சந்நிதானத்தில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் சஹஸ்ர கலச பூஜை நடந்தது.

இதற்காக தங்கம், வெள்ளி மற்றும் செப்பு கலசங்கள் ஆயிரத்து ஒன்று எண்ணிக்கையில் வைக்கப்பட்டு திரவியம், நவரத்தினம், நறுமண பொருட்கள், ஏழு கடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்தம் ஆகியவை நிரப்பப்பட்டன. தொடர்ந்து பிரதானமாக உள்ள பிரம கலசம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர் வழிபாடுகளுக்குப் பிறகு இன்று (ஆக.21) இரவு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. பின்பு ஓணம் வழிபாட்டுக்காக வரும் ஆக.24-ம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டு பின் ஆக.28-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும்.

Source: Read Full Article