விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில், காவல் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் பெண் ஒருவர் மீது அவரது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அருகில் நடந்து சென்ற முதியவர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் நகரப் பகுதிக்குட்பட்ட முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புராணி. இவருக்கும் இவரது கணவர் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

பிரிந்து வாழ்ந்தபோதிலும், ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, கைப்பேசி வாயிலாகவும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் தொல்லை அதிகரித்ததால் அன்புராணி ஏற்கனவே விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்துள்ளார்.

பட்டப்பகலில் கொடூரத் தாக்குதல்

இந்நிலையில், இன்று அன்புராணி ஆஞ்சநேயர் கோவில் வீதியில் டவுன் காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் ராமச்சந்திரன், தான் கையில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை அன்புராணியின் முகத்தில் வீசியுள்ளார்.

ஆசிட் முகத்தில் பட்டதால் அன்புராணி வலியால் அலறித் துடித்தார். அச்சமயத்தில் அவருக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் ஆசிட் சிதறியதில், இருவருமே காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய உடனடியாக ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மருத்துவ சிகிச்சை மற்றும் காவல் துறை நடவடிக்கை

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், அருகிலிருந்த நகரப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அன்புராணி மற்றும் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டனர். முதற்கட்டமாக அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இருவருமே மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கணவர் ராமச்சந்திரனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source: Read Full Article