புதுச்சேரி: பாஜகவின் அரசியல் நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நடுநிலை தவறி, பாஜகவின் ஏஜெண்டாகச் செயல்படுவது உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயலுக்கு ஆளுநர் பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - கடும் கண்டனம்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகையின் போது, காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் 'வண்ண விருது' வழங்கும் விழா நடைபெற்றது. அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்த்தாய்க்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

அரசு விழாக்களில் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அது புறக்கணிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் என். ரங்கசாமி ஏன் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்? இந்தச் சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், புதுச்சேரி முதலமைச்சரும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பாஜக விழாவில் ஆளுநர் - அதிர்ச்சி தகவல்:

காவல் துறை விழாவிற்குப் பிறகு, புதுச்சேரி பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க பாஜகவின் உட்கட்சி சார்ந்த அரசியல் விழாவாகும். இதில் அரசு அதிகாரிகளோ அல்லது முதலமைச்சரோ பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்பாராத அதிர்ச்சியாக மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அந்த பாஜக விழா மேடையில் வீற்றிருந்தார்.

அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் பதவி என்பது மிகவும் நடுநிலையானது; எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படக் கூடாது. அப்படி இருக்கையில், பாஜகவின் விழா மேடையில் ஆளுநருக்கு என்ன வேலை?

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாகிவிட்டது:

தற்போது புதுச்சேரி ஆளுநர் மாளிகையானது பாஜகவின் தலைமை அலுவலகம் போலச் செயல்பட்டு வருகிறது. பாஜகவினரை மட்டுமே ஆளுநர் உடனுக்குடன் சந்திக்கிறார்; மற்ற எதிர்க்கட்சியினர் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. நிர்வாக நடைமுறைகளும், எந்தெந்த நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிகளும் அவருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தே அவர் பாஜக நிகழ்வில் பங்கேற்றது ஆளுநர் பதவிக்கே ஏற்படுத்திய மாபெரும் இழுக்காகும்.

விளக்கம் அல்லது ராஜினாமா தேவை:

பாஜக விழாவில் ஆளுநர் பங்கேற்றதன் மூலம் அவர் அக்கட்சியின் ஏஜெண்டாகச் செயல்படுவது அம்பலமாகியுள்ளது. ஆளுநரின் இந்தச் செயல் புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தின் மீதும் ஆளுநருக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், இந்தச் சம்பவத்திற்கு அவர் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், தனது துணைநிலை ஆளுநர் பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வீடியோ பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Read Full Article