விழுப்புரம் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றி செல்லுதல், பொருட்களை எடுத்து செல்லுதல், குதிரை சவாரி ரைடிங் மற்றும் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களின் உரிமையாளர்கள் தங்களது குதிரைகளின் விபரங்களை தமிழ்நாடு விலங்கு நலவாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

குதிரைகளின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடர்பான விதிமுறைகளை உரிமையாளர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். பதிவு பெறுவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து தேவையான உரிமம் பெறுதல், உரிமையாளர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் அல்லது அலட்சியமாக பராமரித்தல் தொடர்பான வழக்குகள் இல்லாதிருத்தல், குதிரைகள் மற்றும் தங்குமிடங்களை ஆய்வு செய்ய அனுமதித்தல், உரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்கள் தங்குமிடங்களில் போதிய காற்றோட்டம், சுகாதாரம், பாதுகாப்பு, கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை வசதிகள், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு மற்றும் போதிய குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிரை உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்கு நலவாரிய https://tnawb.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.08.2026 தேதிக்குள் பதிவு செய்து தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும், பதிவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் / கால்நடை மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு விலங்கு நலவாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையளதம் (https://tnawb.tn.gov.in) மூலம் விபரம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article