கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு நான்கு ஆண்டு சிறை - கோவை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு !!!
கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 4 சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கோவை, துடியலூர் சந்தை வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி வளர்மதி. ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வளர்மதியே காதலித்து திருமணம் செய்து கொண்டார். வளர்மதியை திருமணம் செய்வதற்கு முன்பே வேறொரு பெண்ணை திருமணம் செய்ததும் அவருக்கு குழந்தை இருப்பதும் பின்னர் தான் வளர்மதிக்கு தெரியவந்தது.
இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக வளர்மதி இருந்தால், கணவரிடம் முதல் திருமணத்தை பற்றி கூறாமல் தன்னை ஏமாற்றியது ஏன் ? என்று கேட்டு தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் தன்னோடு வாழ விரும்பினால், வாழலாம் இல்லாவிட்டால் செத்து தொலை என்று திட்டியதாக தெரிகிறது. மன வருத்தம் அடைந்த வளர்மதி கடந்த 2010 ஆண்டு சாணி பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரவிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடத்திய நீதிபதி சுந்தர்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அர்ச்சனா ஆஜராகி வாதாடினார்.
