"காலி மனை அங்கீகாரம்"

சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இங்கு காணப்படும் விலை உயர்வு ஒரு கட்டத்தில் குறைந்த வருவாய் பிரிவினர் யாரும் வீடு வாங்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் , குறைந்த வருவாய் , நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீடுகளை வாங்கி குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் , பழைய வீடுகள் விலையும் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில் , பக்கத்து மாவட்டங்களில் காலி மனை வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்களும் , எதிர்கால தேவை என்ற அடிப்படையில் பக்கத்து மாவட்டங்களில் காலி மனை வாங்க ஆசைப்படுகின்றனர். இவ்வாறு காலி மனை வாங்கும் போது, அதன் அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிகாரப் பூர்வ அறிக்கையை பெற வேண்டும்

புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு திட்டம் என்றால், நகர், ஊரமைப்பு சட்டப்படியான அங்கீகாரம் இருக்கிறதா என்று பாருங்கள். முறையான அங்கீகாரம் இல்லாத புதிய மனைப் பிரிவு திட்டங்களில் நிலம் வாங்குவது பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக அமையும்.

குறிப்பாக , புதிதாக நீங்கள் மனை வாங்க விரும்பும் திட்டத்தில் , மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு என்ன வகைப்பாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். குடியிருப்புக்கான வகைப் பாட்டில் மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு இல்லாவிட்டால் அதுவும் பிரச்னையை ஏற்படுத்தும்.

இதில் தற்போது மனைக்கான விலை தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சலுகை வழங்குகின்றன. இது போன்று, மனைக்கான விலை தொகையை தவணை முறையில் செலுத்தும் வாய்ப்பு நடுத்தர மக்களுக்கு வசதியாக அமையும்.

ஆனால், தவணை முறையின் மனை விற்பனை என்றால், அதில் மனையின் விலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று பாருங்கள். அதன் பின், மனையின் விலை என்ன, அதில் முன் பணமாக எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும், மீதி தொகையை எத்தனை மாதங்களில் செலுத்த வேண்டும் என்பதற்கான எழுத்துப் பூர்வ அறிக்கையை பெற வேண்டும்.

வசதி குறைவான மனை கிடைக்க வாய்ப்பு

சில நிறுவனங்கள் , மனையின் விலையில், 50 சதவீத தொகையை செலுத்தியவுடன் உங்கள் பெயருக்கு பத்திரப்ப திவு செய்து கொடுத்து விடும். மீதி தொகையை ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள் தவணைகளாக செலுத்த அனுமதிக்கும். எனவே , நீங்கள் தவணை முறையில் மனை வாங்கும் போது அதன் விலை , தவணை காலத்துக்கு வட்டி வசூலிக்கப்படுமா , பத்திரப்பதிவு எப்போது என்பது போன்ற விஷயங்களை தெளிவாக விசாரித்து அறிய வேண்டும்.

குறிப்பாக , உங்களுக்கான மனையை முன் கூட்டியே தேர்வு செய்ய வேண்டியது அவசியம். தவணை முடிந்த நிலையில் மனை தேர்வு என்பது உங்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வசதி குறைவான மனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Source: Read Full Article