விழுப்புரம்: சர்வதேச நகரமான ஆரோவில்லில் உருவாகும் திடக்கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் ‘எகோசர்வீஸ்’ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கழிவுகளை வகைப்படுத்தி வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

1997 முதல் செயல்படும் எகோசர்வீஸ்

ஆரோவில் பகுதியில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், குடியிருப்புகள், சமூக அமைப்புகள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை முறையாக சேகரித்து, அவற்றை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியை எகோசர்வீஸ் மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், ஆரோவில் பகுதியில் கழிவு மேலாண்மையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

வீடுகளில் இருந்தே கழிவுகள் சேகரிப்பு

ஆரோவில் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், முதற்கட்டமாக எகோசர்வீஸ் பணியாளர்களால் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் அவை எகோசர்வீஸ் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், காகிதங்கள், உலோகப் பொருட்கள், கேன்கள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன.

தரம் பிரிக்கப்பட்ட பின்னர் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சம்பந்தப்பட்ட மறுசுழற்சி முகவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, ஆரோவில் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

6 வகையான பிரிப்புக்கு முக்கியத்துவம்

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிவுகளை வகைப்படுத்தி வழங்கும் வகையில் ஆறு வகையான பிரிப்பு முறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக், காகிதம் மற்றும் பேக்கிங் பொருட்களை சுத்தம் செய்த பிறகே கழிவுத் தொட்டிகளில் போடுவதால், கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் குறைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கழிவுகளை வெறுமனே அகற்றாமல், அவற்றில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாக பிரித்து மீண்டும் பயன்பாட்டுக்குள் கொண்டு வருவது இம்முறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தினசரி 500 முதல் 600 கிலோ கழிவுகள்

எகோசர்வீஸ் நிர்வாகிகள் கூறுகையில், “ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன. தினந்தோறும் சுமார் 500 முதல் 600 கிலோ வரை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை வகைப்படுத்தப்படுகின்றன. பின்னர் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சம்பந்தப்பட்ட முகவர்களிடம் வழங்கப்படுகின்றன.

கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கும் பொதுமக்கள் கழிவுகளை முறையாக சுத்தம் செய்து, வகைப்படுத்தி வழங்குகின்றனர்” என்றனர்.

மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்படுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் அதிக அளவில் குப்பைகள் குவிந்து வருகின்றன. பல இடங்களில் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்படாமல் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், ஆரோவில்லில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு சேகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் முறையை மற்ற பகுதிகளிலும் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குப்பைகளை அகற்றுவது மட்டுமின்றி, அவற்றை உருவாகும் இடத்திலேயே மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக பிரித்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடைமுறை பரவலாக செயல்படுத்தப்பட்டால், குப்பைக் கிடங்குகளின் சுமையை குறைப்பதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Source: Read Full Article