செஞ்சி: செஞ்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சுமார் 2 மாதங்களாகியும், இதுவரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்கட்டமைப்பு உபகரணங்கள் வராததால் திறப்பு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அறிவுசார் மையத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரூ.1.60 கோடியில் அறிவுசார் மையம்

தமிழக அரசு கடந்த 2024-ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செஞ்சி உள்ளிட்ட 13 பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.20.44 கோடி மதிப்பில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக, செஞ்சி-மேல்களவாய் சாலையில் ரூ.1.60 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அப்போதைய செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

இந்த மையத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கு உதவும் வகையில் வாசிப்பு அறை, நூலகம், கணினி வசதி, இணையதள வசதி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

கட்டுமானப் பணி முடிந்து 2 மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை

அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து, கட்டடம் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. கட்டடத்துக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மையத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு உபகரணங்கள் முழுமையாக வராததால் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் மட்டுமின்றி, ரூ.1.60 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட கட்டடமும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

செஞ்சி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமப்புறங்கள் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வங்கி தேர்வுகள், UPSC உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களும், அமைதியாக அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் செஞ்சியில் குறைவாக இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளியூர்களுக்கு சென்று தங்கி படிப்பதற்கும், தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்துவதற்கும் பொருளாதார வசதி இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அறிவுசார் மையம் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு அமைதியான படிப்பிடம், நூல்கள், நாளிதழ்கள், கணினி மற்றும் இணைய வசதி, போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.

புத்தகங்கள், கணினி வசதிகள் முறையாக இருக்க வேண்டும்

அறிவுசார் மையத்தை திறந்து வைப்பதுடன் அதிகாரிகளின் பணி முடிந்துவிடக்கூடாது என மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் தினசரி பயன்படுத்தும் வகையில் போதுமான எண்ணிக்கையில் புத்தகங்கள், நாளிதழ்கள், நடப்பு ஆண்டுக்கான போட்டித் தேர்வு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மையத்தில் நிறுவப்படும் கணினிகள் மற்றும் இணையதள வசதிகள் தடையின்றி செயல்பட வேண்டும். மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை

அறிவுசார் மையத்தின் பின்புறம் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. மாணவர்கள் தினசரி வந்து படிக்க உள்ள மையத்தை சுற்றி சுகாதாரமான சூழல் இருப்பது அவசியம். எனவே, அங்கு இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியம்

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அறிவுசார் மையத்துக்கு இதுவரை கேட் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. திறந்தவெளி போன்று இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும், கட்டடத்தில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, மையத்தை சுற்றிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், நுழைவாயிலில் கேட் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக திறக்க வேண்டும்

அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் நீண்ட நாட்கள் பூட்டியே கிடப்பதைவிட, மாணவர்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பதே செஞ்சி பகுதி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அறிவுசார் மையத்தில் தேவையான உள்கட்டமைப்பு உபகரணங்களை விரைந்து நிறுவி, நூலகம், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன்பின்னர் காலதாமதமின்றி மையத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: Read Full Article