தஞ்சாவூர்: நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த தனது தாயை உடனடியாக மீட்க வேண்டும் என அவரது மகன் ராஜா மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் தனியார் யாத்ரா நிறுவனம் மூலம் ஆன்மிகப் பயணமாக நேபாளத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மீதமுள்ளவர்களின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கடைசியாக வந்த புகைப்படம்... அதன்பிறகு தகவல் இல்லை!

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்ரா என்பவரும் இந்த ஆன்மிகப் பயணக் குழுவில் சென்றுள்ளார். அவரது மகன் ராஜா கூறுகையில், “கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எனது அம்மா ஆன்மிகப் பயணமாக நேபாளத்துக்கு சென்றார். நேற்று காலை சுமார் 6 மணியளவில் எனது செல்போனுக்கு ஒரு புகைப்படம் அனுப்பினார். அதுதான் அம்மாவிடம் இருந்து கிடைத்த கடைசி தகவல்.

அதன்பிறகு நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் வந்த நிலையில், அம்மாவை செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.

“மீட்கப்பட்ட 20 பேரில் அம்மா பெயர் இல்லை”

மேலும் அவர் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வாட்ஸ்-அப் குழு மூலம் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இதுவரை உறுதியான அரசு தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள 20 பேரின் பட்டியலிலும் எனது அம்மாவின் பெயர் இல்லை. இதனால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. ஏற்கனவே இரண்டாவது நாளாக எந்த தகவலும் இல்லாமல் இருப்பதால் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளோம்” என்றார்.

“காலம் தாழ்த்தாமல் மீட்க வேண்டும்”

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் இருப்பிடத்தை உடனடியாக கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜா வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு முக்கியம். காலம் தாழ்த்தாமல் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி, நேபாளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர வேண்டும்” என அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக பயணிகளின் குடும்பத்தினர் உறுதியான தகவலுக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நேபாளம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மக்கள மாயமானவர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆன்மீகப் பயணமாக நேபாளத்திற்கு 57 பேர் சென்ற நிலையில் அதில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதம் உள்ள 37 பேர் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 300 இந்தியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது,

இந்நிலையில் நேபாளம் பெரு வெள்ளத்தில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சையில் பொதுமக்கள் பேரணியாக வந்து ரயில் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர், மாயமான தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை பாதுகாப்பாக உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

Source: Read Full Article