மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை: ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

முதுகுத்தண்டுவட காசநோயை மிகவும் சவாலான அறுவைசிகிச்சை

மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH), 28 வயதுடைய 28 வார கர்ப்பிணிக்கு ஏற்பட்டிருந்த முதுகுத்தண்டுவட காசநோயை மிகவும் சவாலான அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளது. அறுவைசிகிச்சை முழுவதும் நோயாளி குப்புறப் படுக்க வைக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, வயிறு மற்றும் வளர்கருவைப் பாதுகாக்கும் சிறப்பு உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அறுவைசிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி-ஆர்ம் (C-arm) ஸ்கேன் கதிர்வீச்சிலிருந்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க நுட்பமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின் குணமடைந்த அப்பெண், முழு கர்ப்ப காலத்தையும் நிறைவு செய்து, சமீபத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். கிட்டத்தட்ட ஓராண்டாக கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த அப்பெண்ணுக்கு, திடீரென நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்வின்மையும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அவர் இம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையில், அவரது முதுகுத்தண்டுவடத்தில் T1-T2 பகுதியில் நோய்த்தொற்று, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற உருமாற்றம், அதிக அழுத்தத்தால் ஏற்படும் நரம்பு பாதிப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த அறிகுறிகள் 'பாட்ஸ் ஸ்பைன்' (Pott's spine) எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோயாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியது. மோசமடைந்து வந்த நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் தண்டுவடத்தின் நிலையற்ற தன்மை காரணமாக உடனடி அறுவைசிகிச்சை செய்வது அவசியமானது.

'டீகம்ப்ரஸிவ் லேமினெக்டமி'

தண்டுவட அழுத்தத்தைக் குறைக்க T1-T2 பகுதியில் 'டீகம்ப்ரஸிவ் லேமினெக்டமி' (decompressive laminectomy) அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் செய்தனர். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து திசுக்கள் பயாப்ஸி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, நோய்த்தொற்றுக்குள்ளான திசுக்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, metal implants மற்றும் நோயாளியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளைப் பயன்படுத்தி, C3-T4 பகுதியில் முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆய்வகப் பரிசோதனையில், தீவிர வீக்கம் மற்றும் காசநோயுடன் தொடர்புடைய 'எபிதீலியாய்டு கிரானுலோமா' (epithelioid granuloma) எனப்படும் அறிகுறியும் கண்டறியப்பட்டது. இது முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பை உறுதிப்படுத்தியது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டார். காசநோய்க்கான தொடர் சிகிச்சையின்போது, கருவின் நிலையும், நோயாளியின் கல்லீரல் செயல்பாடும் கண்காணிக்கப்பட்டன. நரம்பு மண்டலம் மற்றும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். பின் தனது முழு கர்ப்ப காலத்தையும் நிறைவுசெய்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

முன்கூட்டியே நோய்த்தொற்றைக் கண்டறிதல்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இது போன்ற சிக்கலான முதுகுத்தண்டுவட நோய்களைக் கையாளும் போது, முன்கூட்டியே நோய்த்தொற்றைக் கண்டறிதல், சரியான நேரத்தில் தண்டுவடத்தின் அழுத்தத்தைக் குறைத்து நிலைப்படுத்துதல், கருவின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. சிறப்பு மருத்துவக் குழுக்கள் கவனமாகத் திட்டமிட்டு, தாய் மற்றும் சேயின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படும்போது சிறப்பான வெற்றி நிச்சயம் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

Source: Read Full Article