திருச்சி: தமிழ்நாட்டின் மையப்பகுதியாகத் திகழும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொழில் வளர்ச்சியில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. மாவட்டத்தின் தொழில் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரண்டு புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 979 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் உள்கட்டமைப்புகள் உருவாக உள்ளன.

இதில், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை இரண்டாம் கட்டமாக 283 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கனவே மணப்பாறையில் முதல் கட்ட சிப்காட் தொழிற்பேட்டை செயல்பட்டு வரும் நிலையில், இந்த விரிவாக்கம் அப்பகுதியில் தொழில் முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதேபோல், துவாக்குடி–நாவல்பட்டு பகுதியில் 696 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான புதிய சிப்காட் வளாகம் உருவாக்கப்பட உள்ளது. துவாக்குடி, நாவல்பட்டு பகுதிகள் ஏற்கனவே பொறியியல் உற்பத்தி, கனரக தொழில் மற்றும் பிஹெச்இஎல் சார்ந்த துணைத் தொழில்களுக்கு முக்கிய மையமாக உள்ளன.

புதிய சிப்காட் வளாகம் அமையும்போது ஹெவி இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், நவீன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் திருச்சியை நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகும். இதனால் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, அவற்றைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

979 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய தொழிற்சாலைகளின் வருகை உள்ளூர் போக்குவரத்து, கட்டுமானம், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சேவைத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்யும்.

போக்குவரத்து வசதியும் கூடுதல் பலம்

திருச்சியின் மிகப்பெரிய பலமாக அதன் புவியியல் அமைவிடம் உள்ளது. சர்வதேச விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய ரயில் வழித்தடங்கள் ஆகியவை திருச்சியை நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன.

இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள நிறுவனங்களுக்கு வெளிநாடுகளுக்கும் எளிதாக கொண்டு செல்லும் வசதி உள்ளது.

பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் MSME நிறுவனங்களுக்கும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மணப்பாறையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்பேட்டையின் விரிவாக்கமும், துவாக்குடி–நாவல்பட்டில் உருவாக உள்ள புதிய தொழில் வளாகமும் ஒரே நேரத்தில் முன்னேறும்போது, திருச்சியின் தொழில் வரைபடமே மாறும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை, கோவை வரிசையில் திருச்சியையும் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையமாக உயர்த்துவதற்கான அடித்தளமாக இந்த 979 ஏக்கர் புதிய சிப்காட் திட்டங்கள் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினர் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் திருச்சியின் தொழில் வரைபடம் பிரமாண்டமாக மாற போகிறது. இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Source: Read Full Article