தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், 65 சிறப்பு அதிரடி படைகளை அமைக்கவும், அதற்காக ரூ.264 கோடி நிதி ஒதுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபோது, "போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிரடி படை அமைக்கப்படும்" என அறிவித்திருந்தார். அதனைச் செயல்படுத்தும் விதமாக இந்த 65 சிறப்பு அதிரடி படைகளை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் இன்று இந்த அதிரடி படையை தொடங்கி வைக்க உள்ளார்.

அரசாணை விவரங்கள் மற்றும் செயல்பாடுகள்

சிறப்பு அதிரடி படைக்காக நிதி ஒதுக்கீடு செய்து உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அமைக்கப்படும் இந்த 65 சிறப்பு அதிரடி படைகளும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். மாநில அளவில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் இந்த சிறப்பு படை செயல்படும்.

மாவட்ட வாரியாக படைகளின் பகிர்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போதைப்பொருள் சிறப்பு படை என மொத்தம் 37 படைகளும், சென்னையில் 12 சிறப்பு படைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்படும்.

படை கட்டமைப்பு மற்றும் பணியிடங்கள்

இப்பணிகளுக்காக மொத்தம் 65 இன்ஸ்பெக்டர்கள், 260 சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,300 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறப்பு அதிரடி படையிலும் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 போலீசார் இடம்பெறுவர். போதைப்பொருள் தடுப்பு பணியின் தலைமைமையகம், கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் இயங்கும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article