தஞ்சாவூர்: நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில், கும்பகோணத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதால், உறவினர்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.

திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம்

நேபாளம் - திபெத் எல்லையையொட்டிய ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி ஆற்றில் நேற்று காலை திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்தன. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசித்தவர்கள் மட்டுமின்றி, அந்த வழியாக பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர்.

வெள்ளப்பெருக்கால் ராசுவா, நுவாகோட், தாடிங் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள சுற்றுலா வாரியத்தின் முதற்கட்ட தகவலின்படி, 384 பயணிகள் தொடர்பில் இல்லாத நிலையில், அவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 93 பேர் நேபாள நாட்டினரும் ஆவர். வெளிநாட்டினரில் 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேர்

இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் மூலம் கடந்த 23-ம் தேதி ஆன்மிகப் பயணமாக புறப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் 36 பெண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் வழியாக திபெத் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

மூன்று வாகனங்களில் பயணம் செய்த இந்த குழுவினர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே சென்றபோது சிக்கியுள்ளனர். ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உறவினர்கள் பதற்றம்

மீதமுள்ள பயணிகளின் நிலை குறித்து தெளிவான தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

சுற்றுலா ஏற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு பயணிகளின் நிலை குறித்து உறவினர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைவருடனும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் கூறுகையில், 57 பேர் தங்களது நிறுவனத்தின் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும், அவர்களில் 20 பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும், மற்றவர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் காரணமாக சில பகுதிகளுக்கு தரைவழியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் பல்வேறு சவால்களுக்கு இடையே நடைபெற்று வருகின்றன.

இந்தியர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக இந்திய தூதரகமும் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு உதவி எண்கள்

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

இந்தியாவுக்குள்: 1800 309 3793
வெளிநாட்டிலிருந்து: +91 8069009901
மிஸ்டு கால்: +91 8069009900

இந்த எண்களை தொடர்புகொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பெருவெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் தொடர்பு இல்லாத நிலையில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 தமிழர்களில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. மீதமுள்ளவர்களையும் விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கும்பகோணம் டிராவல்ஸ் மூலம் சென்றவர்களில் சிவரஞ்சனி, கற்பகம், மாறன், சாந்தி, முத்து குமரேசன், நவோ கபிர்தாஸ், விஜய புவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கிருபா ஹரி, வள்ளிநாயகி, சத்தியா, புஷ்பராணி, கனகசபை, ராதை, ரத்தினகுமார், பூங்குழலி, பழனியப்பன், மணிமேகலை, முருகானந்தம் ஆகிய 20 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.

Source: Read Full Article