பிரபல இஸ்லாமிய பேச்சாளர் அப்துல் பாசித் உணவகத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ஈ.சி.ஆர் அக்கரையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் இம்தியாஸ் அகமது. இவருக்கு நீலாங்கரையில் செயல்பட்டு வரும் ரூஹி என்ற உணவகத்தை நடத்தி வந்த அப்துல் பாசித்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல பேச்சாளராகவும் சமூகத்தில் மதிப்பிற்குரிய நபராகவும் அறியப்பட்ட அப்துல் பாசித்தை இம்தியாஸ் முழுமையாக நம்பினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அப்துல் பாசித், தனது உணவகத்தை விரிவுபடுத்த நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இம்தியாஸ் அகமதுவிடம் ரூ.50 லட்சம் கடனாக தருமாறு கேட்டுள்ளார். 3 மாதங்களுக்குள் பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்ததை நம்பி இம்தியாஸ் அகமது 2025 டிசம்பர் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலத்தில் ஐந்து தவணைகளாக மொத்தம் ரூ.50 லட்சத்தை அப்துல் பாசித்திடம் நம்பிக்கையின் பேரில் வழங்கியுள்ளார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு உணவக விரிவாக்கப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுகுறித்து இம்தியாஸ் அடிக்கடி கேட்டுள்ளார். அதற்கு அப்துல் பாசித் முறையான பதிலளிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். விசாரணையில், இம்தியாஸிடம் பெற்ற பணத்தை உணவகத்திற்குப் பயன்படுத்தாமல் தனது பழைய நிலுவைக் கடன்களை அடைக்கவும் பிற கடனாளிகளுக்குப் பணம் செலுத்தவும் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல் வி.ஆர்.மாலில் புதிய உணவகம் தொடங்குவதற்கான முன்பணமாகவும் கொடுத்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் ஷாஹிதா தமீம் என்ற பெண்ணிடமும் ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடும் கோபமடைந்த இம்தியாஸ் அகமது அளித்த புகாரின் பேரில் சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் அப்துல் பாசித் மீது புகாரளித்தார்.

இதனடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அப்துல் பாசித் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ், மனுதாரர் தொடர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ஏமாற்றியுள்ள குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டும் வழக்கின் புலனாய்வு நிலுவையில் உள்ளதாலும் முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article