திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கருவறையை புகைப்படம் எடுப்பது, கியூ லைனில் செல்போன் பயன்படுத்துவது, கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட செயல்களைத் தடுக்கும் வகையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் இன்று முதல்முறையாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்ற அவர், பக்தர்கள் தரிசனம் செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து கம்பத்து இளையனார் சன்னதி, பெரிய நந்தி உள்ளிட்ட ஐந்தாம் பிரகாரப் பகுதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் பொது தரிசன வரிசையில் சென்று பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவில் கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்த அமைச்சர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். கொடிமரம் முன்பு சிறிது நேரம் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

வார விடுமுறை நாட்கள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் எந்தெந்த வழிகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், எவ்வாறு தரிசனம் செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கியூ லைன் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிலில் பக்தர்கள் விரைவாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செல்போனுக்கு ஏன் தடை?

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக அமைதிக்காகவும், கோவில் சிற்பங்கள் மற்றும் கட்டிடக் கலையை கண்டு ரசிப்பதற்காகவும் வருகிறார்கள். ஆனால் சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மற்ற பக்தர்களின் ஆன்மிக அனுபவம் பாதிக்கப்படுகிறது என்றார்.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி

அண்ணாமலையார் கோவிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

ஆன்லைன் தரிசன முன்பதிவு முறை முழுமையாக நடைமுறைக்கு வந்தால், முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து தரிசனம் செய்யும் நிலை உருவாகும் என்றும், இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தரிசன வரிசை மேம்படுத்தப்படும்

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வரிசையை மேலும் மேம்படுத்துவது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாடவீதிகளில் ஹோம்ஸ்டேக்கள் குறித்து நடவடிக்கை

அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், கோவில் மாடவீதிகளில் உள்ள குடியிருப்புகள் பலவும் ஹோம்ஸ்டேக்களாக மாற்றப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர உதவிக்கு தன்னார்வலர்கள், கூடுதல் மருத்துவர்கள்

கியூ லைனில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக உதவும் வகையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவில் வளாகத்துக்குள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் தரிசனத்தை எளிதாக்குதல், செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் மற்றும் ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசன அனுபவத்தை ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Source: Read Full Article