தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய 35 வயதுடைய வட மாநிலப் பெண் ஒருவரின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது.

உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா

அதிகாரிகள் அந்தப் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று, அவரது உடைமைகளை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தினர். அந்தச் சோதனையின் போது, தாய்லாந்து நாட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடன் சேர்த்து, பல பொட்டலங்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தக் கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹14.50 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 35 வயது வட மாநிலப் பெண்ணைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இந்த கஞ்சாவை அவருக்கு யார் வழங்கியது, இதனை சென்னையில் யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறித்து அந்தப் பெண்ணிடம் காவல்துறையினரும் அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article