தஞ்சாவூர்: வயது 10 தான்... ஆனால் சாதனைகளின் பட்டியலைப் பார்த்தால் வயதைவிட பல மடங்கு பெரியதாக உள்ளது. கராத்தே, சிலம்பம், யோகா, கோ-கோ, தடகளப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகிறார் தஞ்சை மாணவன் ரா. பிரஜேஸ் ராகவ். தற்போது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

தஞ்சையில் 6-ம் வகுப்பு படித்து வரும் பிரஜேஸ் ராகவுக்கு வயது 10. சிறு வயதிலேயே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இவர், தனது 4 வயது முதலே ஆசிரியரும் பயிற்சியாளருமான ராஜேஷ் கண்ணாவிடம் முறையான பயிற்சி பெற்று வருகிறார். கராத்தேவில் பிரஜேஸ் ராகவ் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 1-ம் டான் பிளாக் பெல்ட் மற்றும் நேம் பெல்ட் பெற்றுள்ள அவர், தான் பங்கேற்கும் பல்வேறு கராத்தே போட்டிகளில் கட்டா மற்றும் குமிட்டி பிரிவுகளில் முதலிடம் பிடித்து வருகிறார்.

2019 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாவட்டம் முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கேற்று சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியின் மண்டல அளவிலான போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கம் வென்ற பிரஜேஸ் ராகவ், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாநில கராத்தே போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் மாணவர் பிரஜேஸ் ராகவ். மலேசியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று 2 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

கராத்தேவில் மட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்திலும் பிரஜேஸ் ராகவ் தொடர்ந்து சாதித்து வருகிறார். சிலம்பத்தை லாவகமாக சுழற்றி பல்வேறு சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிலம்பத்திற்கான படிநிலை கிரேடு சான்றிதழ் பயிற்சியில் இதுவரை 7 நிலைகளை நிறைவு செய்துள்ளார். மேலும் சிலம்பத்தில் பிரவுன் 1 கிரேடு பயிற்சியையும் முடித்துள்ளார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற யோகா ஓபன் கின்னஸ் போட்டியிலும் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார். இதேபோல், 2026-ம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டியில் மண்டல அளவில் வெண்கலப்பதக்கம் வென்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயப் போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பது பிரஜேஸ் ராகவின் தனித்திறனாக உள்ளது. குறிப்பாக 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நான்கு வயதில் தொடங்கிய பயிற்சி, தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு பிரஜேஸ் ராகவை வளர்த்துள்ளது. எந்தப் போட்டியில் பங்கேற்றாலும் தனித்துவமான திறமையுடன் திகழ வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார் அவரது பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா.

கராத்தே, சிலம்பம், யோகா, கோ-கோ, ஓட்டப்பந்தயம் என பல்வேறு துறைகளில் 10 வயதுக்குள்ளேயே சாதனைகளை குவித்து வரும் பிரஜேஸ் ராகவ், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Read Full Article