தேர்தல் தோல்வி- அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அமைத்து வந்த நிலையில், தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுதுத தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி திட்டமிட்டது.

இதற்காக 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்தனர். ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகில் இணைந்தனர்.

தவெகவில் விஜயபாஸ்கர்

அந்த வகையில், அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்தார். சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்த அவர், மீண்டும் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என காய் நகரத்தி வருகிறார். அடுத்தாக விராலிமலை தொகுதி மட்டுமில்லாமல் புதுக்கோட்டையை தன் வசப்படுத்தும் வகையில் தவெக நிர்வாகிகளை தனக்கு ஆதரவாக இழுத்து வருகிறார். அந்த வகையில் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தன்னை அறிமுகம் செய்து கூட்டம் நடத்த நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தவெகவினருக்கு ஸ்கார்பியோ கார்

மேலும் அறிமுகம் கூட்டத்திற்கான முழு செலவை தான் பார்த்துக்கொள்வதாகவும், கூட்டம் ஏற்பாடு செய்யும் நிர்வாகிகளுக்கு விலை உயர்ந்த ஸ்கார்பியோ கார் வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் பகுதியில் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், கலந்து கொண்ட மாவட்டச் செயலர் பழனிவேல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், புதுக்கோட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது எனது சொத்துக்களை விற்று பணம் கொண்டுவரும்படி விஜயபாஸ்கர் தெரிவித்ததாக கூறினார்.

10 கோடி வசூல் செய்த விஜயபாஸ்கர்.?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக சார்பாக போட்டியிட வேட்பாளராக அறிவிக்க ஒவ்வொருவரிடம் இருந்து பணம் வசூல் செய்ததாகவும், மொத்தமாக 10 கோடி ரூபாய் விஜயபாஸ்கர் வசூல் செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் ஆலங்குடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க விமல் என்பவரிடம் பணத்தை வாங்கிவிட்டு அவரை ஏமாற்றியதாகவும் பழனிவேல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது தவெகவில் இணைந்துள்ள அவர், அங்குள்ள நிர்வாகிகளுக்கு ஸ்கார்பியோ கார், கறி விருந்து வைத்து வருகிறார். இந்த பணம் எல்லாம் விஜயபாஸ்கர் எங்கிருந்து சம்பாதித்தார் என பழனிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: Read Full Article