இந்திய கிரிக்கெட் அணி தற்பாேது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. அயர்லாந்து அணியுடனான டி20 தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி இங்கிலாந்துடான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

நாளை மறுநாள் தொடங்கும் ஒருநாள் போட்டி:

ஐபிஎல் ஜாம்பவான்கள் ஆடியும் அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருப்பது மட்டுமின்றி, இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த சூழலில் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டி20 தொடரைச் சந்தித்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடரை சுப்மன்கில் தலைமையில் இந்திய அணி சந்திக்கிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரத்தில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான்களும், முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்குகின்றனர்.

விராட் கோலி - ரோகித்:

இந்திய அணி தொடர்ந்து தோல்விப்பிடியில் சிக்கி வரும் சூழலில், அணியை இவர்கள் இருவரும் மீட்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப அழைத்துச் செல்வார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து மண்ணிலும் ஏராளமாக ஆடிய அனுபவம் கொண்ட இவர்கள் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

வெள்ளைப் பந்தில் சிறந்த வீரர்களான இவர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஜோஷ் டங்க், ஆர்ச்சர், அடில் ரஷீத், சாம் கரண், அட்கின்ஸன், ஜோ ரூட் ஆகியோரது பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட அனுபவமும் கொண்டவர்கள் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். அதேசமயம், ரோகித் மற்றும் கோலி இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்காக ஆடுகின்றனர்.

பேட்டிங் பலம்:

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மட்டுமின்றி கேப்டன் சுப்மன்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. அதேபோல, கே.எல்.ராகுல் அணியில் இருப்பதும் கூடுதல் பலம். இவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், இஷான் கிஷன் என பெரிய பேட்டிங் பட்டாளம் உள்ளது.
பந்துவீச்சில் பும்ரா இருப்பது மிகப்பெரிய பலமாகும். அவருடன் பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், குர்னூர் ப்ரார் உள்ளனர். சுழலில் குல்தீப்யாதவ் உள்ளார்.

அசத்தல் ஃபார்மில் இங்கிலாந்து:

டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி ப்ரூக் அசத்தலான ஃபார்மில் உள்ளார். அவருடன் டக்கெட், ஜோ ரூட், பெத்தேல், வில் ஜேக்ஸ், பட்லர் என பேட்டிங் பட்டாளம் உள்ளது. சாம் கரண், லியாம் டாவ்சன், ஆர்ச்சர் என பந்துவீச்சு படையும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டது.

இதனால், இந்த போட்டி இந்திய அணிக்கு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேசமயம், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வருகை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதனால், முதல் ஒருநாள் போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும். அடுத்தாண்டு 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

Source: Read Full Article