TVK Lockup Death: சென்னையில் விக்னேஷ் என்பவர் லாக்-அப்பில் மரணித்த விவகாரம் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினே சட்டப்பேரவையில் தவறான தகவலை பகிர்ந்தார் எனவும் தவெகவினர் சாடி வருகின்றனர்.

சபரிவர்மன் - சிறை மரணம்

நாகர்கோவிலைச் சேர்ந்த சபரிவர்மன் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் மாரடைப்பு தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் , தலைமை சிறை காவலர் திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சபரிவர்மனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.

தவெகவிற்கு கனிமொழி கேள்வி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாகர்கோவிலில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு இதுவரை அமைச்சரோ, முதல்வரோ ஓர் ஆறுதல் கூட சொல்லவில்லை, எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. இப்பொழுது நடக்கும் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சபரிவர்மன் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து யார் மேலாவது பழி போடுவதற்கு தான் வந்து நிற்கிறார்களே தவிர, வேறு எதற்கும் பொறுப்பேற்க தயாராக இல்லை” என தவெக அரசை கடுமையாக சாடினார்.

கனிமொழிக்கு தவெகவினர் பதிலடி

கனிமொழியின் விமர்சனங்களுக்கு தவெகவினர் இணையத்தில் பதிலடி தந்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “தேவையற்ற சாக்குபோக்குகளை சொல்லி குற்றவாளிகளை காப்பாற்றவும், அரசுக்கு கெட்டப்பெயர் வந்துவிடுமோ என திமுக ஆட்சியாளர்களை போன்று யோசிக்காமலும் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து விரைவில் அறிவிப்பு வரக்கூடும் என்றும், சபரிவர்மனின் மனைவிக்கு தற்காலிக அரசு வேலையை உடனடியாகப் பூர்த்தி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் தெரிவிக்கபட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை

கனிமொழிக்கு அடுக்கடுக்கான கேள்விகள்

தவெகவின் ஒருதரப்பினர் கனிமொழிக்கு விளக்கம் அளித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “இன்று சபரிவர்மன் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தீர்களே, இதேபோன்று திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பல லாக்கப் மரணங்களில் பாதிக்கப்பட்டவரின் ஒருவரின் வீட்டிற்காவது சென்றீர்களா? திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார் எனும் இளைஞர் அடித்தே கொல்லப்பட்டார், அதுதொடர்பான வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி காண்போரை கணகலங்க செய்தது. அந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் என்ன எதிர்வினையாற்றினீர்கள்? இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு வன்முறைக்கும் நீங்கள் குரல் கொடுப்பதை மனதார பாராட்டுகின்றோம். உங்களது கேள்விகள் அரசு மேலும் தீவிரமாக செயல்பட வழிவகுக்கும் என நம்புகிறோம். அதேநேரம், திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த எத்தனையோ மோசமான சம்பவங்களுக்கு வெறும் அமைதியை மட்டுமே பதிலாக கொண்டிருந்தீர்களே? எனில் மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு என்பதை வெறும் அரசியலாக மட்டுமே பார்க்கிறீர்களா?” என கனிமொழிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

”சட்டப்பேரவையில் சொன்ன பொய்”

கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் விக்னேஷ் எனும் இளைஞர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டது நினைவில் இருக்கிறதா? எனவும் திமுகவை நோக்கி தவெகவினர் கேள்விகளை தொடுத்துள்ளனர். இதுதொடர்பான பதிவுகளில், “கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் எனும் இளைஞர் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்புடைய காவலாளிகளை கைது செய்ய வேண்டும் என போராட்டங்களும், கோரிக்கைகளும் வலுத்து இருந்தன. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காத அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையினர் எழுதி கொடுத்த பொய்யான தகவல்களை அப்படியே படித்தார். அதில், ”சம்பவம் நடந்த ஏப்ரல் 19ம் தேதியன்று காலை விக்னேஷிற்கு உணவு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாந்தி, வலிப்பு வந்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே அது சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இப்படியெல்லாம் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடும், தனது சொந்த துறைக்கு களங்கம் ஏற்படும் என்றெல்லாம் நினைத்து, தற்போது உண்மைகளை மூடி மறைக்கவில்லை. உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரையும், மக்களின் பாதுகாப்பையும் அரசியலாக்கும் இழிவான செயலை திமுக தொடர்ந்து செய்து வருவதை கைவிட முயலுங்கள்” என கனிமொழிக்கு தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர்.

Source: Read Full Article