தவெக ஆட்சியை கவிழ்க்க திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக அரசு, இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்களிடம் திமுகவினர் ஆட்சியை கலைக்க பேரம் பேசியதாக தகவல் வெளியானது. இதில் முதல் குற்றவாளியாக தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வந்த திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன் என்பவரை விசாரணைக்கு அழைத்த போலீசார் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் பறிமுதல் செய்யதாக குற்றம்சாட்டப்பட்டது.

பத்திரிக்கையாளரிடம் விசாரணை

இந்த நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்காக காவல்துறையின் அழைப்பின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயனிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல்துறை, கடந்த மே மாதம் இரவு 8 ஆம் தேதி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலிக் கடித விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன்?

நான் கொடுத்த புகார் என்ன ஆச்சு.?

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதோடு, புதுச்சேரியில் தங்கியிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து, காரில் வைத்து கடிதம் ஒன்றில் அவர் கையெழுத்திடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய முனைப்பு காட்டாத காவல்துறை, தற்போது, ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் விசாரணை எனும் பெயரில் ஊடகவியலாளர் விஜயன் அவர்களை அலைக்கழித்திருப்பது பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும்.

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப -தவறான வழியில் ஆட்சியமைக்க தவெகவினர் செய்த தவறுகளே, அவர்களுக்கு விரைவில் தகுந்த பாடத்தை புகட்டப்போவது நிச்சயம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article