மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்டாய உழைப்பு தொடர்பான பொருட்களுக்கு எதிராக அவர் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளார். இந்தியா மட்டுமல்லமல் அதனுடன் சேர்த்து 17 நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம், பிரிவு 301-ன் கீழ் இந்த முடிவை எடுத்துள்ளது.

இன்று முதலே அமலுக்கு வரும் வரிகள்

அமெரிக்காவின் புதிய சுங்க வரிகள் ஜூலை 24-ம் தேதி முதல், அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) கூற்றுப்படி, கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காத நாடுகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ட்ரம்ப் இந்தியாவை குறைந்த சுங்க வரிப் பிரிவில் சேர்த்துள்ளதோடு, சில நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவீத சுங்க வரியையும் விதித்துள்ளார். ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

சுங்க வரிகளை விதிப்பது குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

பிடிஐ அறிக்கையின்படி, மனித உரிமை மீறல்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிசெய்ய இந்த நடவடிக்கை உதவும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேம்சன் கிரீர் கூறினார். இதனிடையே, "இத்தகைய தடைகளை திறம்படச் செயல்படுத்த அவர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக, இந்த பொருளாதாரங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தகப் பிரதிநிதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுளளார்.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட எந்தெந்த நாடுகள் மீது சுங்க வரிகள்.?

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, அர்ஜென்டினா, கம்போடியா, கனடா, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா 10 சதவீத வரி விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள் மீது 12.5 சதவீத வரியையும் விதித்துள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட இருந்த 12.5 சதவீத வரி எப்படி குறைக்கப்பட்டது.?

முதலில், இந்தியா மீது 12.5 சதவீத வரி விதிக்கப்படவிருந்தது. ஆனால், தொழிலாளர் நடைமுறைகள் குறித்த நல்ல பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301-ம் பிரிவின் கீழ், 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும் வரிகளை விதித்த ட்ரம்ப்

அமெரிக்கா ஒருபுறம் ஈரானுடன் மீண்டும் போரை தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த பதற்றங்களுக்கு மத்தியிலும், தனது வரிகள் விதிக்கும் கொள்கையிலிருந்து மாறாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது 17 நாடுகள் மீது புதிய வரிகளை விதித்துள்ளார். அதிலும், வரிகள் உடனடியாக அமலுக்கு வருவதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பது போல், போருக்கு நடுவிலும் யோசித்து ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளதாக பேசப்படுகிறது.

Source: Read Full Article