நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்

ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடரானது நடைபெறவுள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

<iframe title="ADMK Leaders Joins TVK | பதவி தர மறுக்கும் தவெக? பின்வாங்கும் அதிமுக தலைகள் நடப்பது என்ன?" src="https://www.youtube.com/embed/TfDvtXt6OVA" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இந்த அமர்வில், எட்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அந்த வகையில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 விவாதம் செய்ய நான்கு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி (திருத்த) மசோதா 2026 மக்களவையில் மூன்று மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026; பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026; மற்றும் தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 ஆகியவை இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேலும் கடந்த கூட்டத்தொடரில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவற்றையும் இம்முறை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முறைகேடு குறித்து கேள்வி எழுப்ப திட்டம்

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக நிகழும் சந்திப்பில் இரு அவைகளின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுப்பார். ஆனால் நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு போன்றவை குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் பரிந்துரைக்கும் தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழன்று கொண்டது. இதனால் கடும் கோபமடைந்த திமுக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து விலகியே இருக்கிறது. அதேசமயம் பாஜகவோடு திமுக இணக்கமாகும் சூழலும் நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனால் பாஜகவின் சட்ட மசோதாக்களுக்கு திமுக எம்.பி.க்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தாலே ஆதரவு தெரிவிப்பதற்கு சமமானது என்பதால் இந்த கூட்டத்தொடர் திமுக எம்.பி.க்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கும் கதையாக மாறியுள்ளது. எனினும் மத்திய அரசுக்கு எதிரான தங்களுடைய நிலைப்பாட்டில் பின்வாங்க போவதில்லை என திமுக எம்.பி.,க்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article