Palani Land Scam: பழனி கோயில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

பழனி நில மோசடி விவகாரம் - 3 பேர் கைது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாக, 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகச் சார்பதிவாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாப்பன்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் முருகதாஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுக்கா கவுண்டன்குளம் ஏசிசி சாலை பகுதியை சேர்ந்த அன்வர்தீன் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 318(4), 336(3), 340(2),49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த 6ம்ம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்கு கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது.

தலைமறைவான குற்றவாளிகள்

இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை முடுக்கி வந்தனர். அதேநேரம், புகார் வெளியானது முதலே பிரதான குற்றவாளிகளாக கருதப்படும் முருகதாஸ் மற்றும் வெள்ளத்துரை ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவர் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து இருப்பது வழக்கின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவர்களிடன் தீவிர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது யார் என்ற உண்மை விரைவில் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை

Source: Read Full Article