இரண்டு வார லண்டன் பயணத்திற்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

<iframe title="DMK MLA Threatens Vijay | "மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் எலும்பு இருக்காது" திமுக MLA பகிரங்கமிரட்டல்" src="https://www.youtube.com/embed/1PHbRFIESCM" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

ஸ்டாலினின் லண்டன் பயணம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்தது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியுற்றார். எனினும் தேர்தல் முடிவுகளுக்குப் பின் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் தனது வழக்கமான அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். இப்படியான நிலையில் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழா லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப் படிப்பை முடித்துள்ள அவர் நேற்று முன்தினம் இன்பன் உதயநிதி பட்டம் பெற்றார். இதனிடையே பேரனை வாழ்த்துவதற்காக மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா முதலில் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றார். பட்டம் பெற்ற தனது பேரன் இன்பன் உதயநிதியை அவர் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற எம்.பி.க்களுடன் காணொலி வாயிலாக லண்டனில் இருந்தவாறே திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இரண்டு வாரங்கள் லண்டனில் கழித்த மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு அவர் வருவார் என சொல்லப்பட்ட நிலையில் அதிகாலை முதலே திமுக தொண்டர்கள், தலைவர்கள் என பலரும் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். ஆனால் ஸ்டாலின் லண்டனில் விமானத்தை தவற விட்டதாகவும், அவர் இரவு வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுகவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணியளவில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை திரும்பினர். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதுதொடர்பாக திமுக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு, “இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன” என தெரிவித்துள்ளது.

Source: Read Full Article