முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் ட்வீட் போட்டவர்கள் மீது குண்டாஸே பாய்ந்ததாக தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சியில் ட்வீட் போட்டதற்கே குண்டாஸ் பாய்ந்தது“

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ, முதலமைச்சரை அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள் என்று கூறினார். மேலும், திமுக ஆட்சியில், டுவீட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போட்டனர் என கேள்வி எழுப்பிய அவர், முதல்வரை எதிர்த்து டுவீட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டதாக தெரிவித்தார். அதோடு, முதல்வருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக, 70 வயதுக்கும் மேல் உள்ள மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு என்றும் விமர்சித்தார்.

“மேடையில் முதல்வருக்கு மிரட்டல் விடுப்பது சட்டம் ஒழுங்கு பிரச்னை“

தொடர்ந்து பேசிய அவர், ஒரு மூன்றாம் நபராக இருந்தால் வட பரவாயில்லை, ஆனால், ஒரு எம்எல்ஏ மேடையில் இப்படி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால், அது சாதாரண பிரச்னை இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என கூறினார். மூன்றாம் தரப்பு நபர் ஒருவர் சாலையில் பேசிவிட்டுச் செல்லலாம், ஆனால், எம்எல்ஏ மைக்கை பிடித்து அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை என விளக்கினார். மேலும், இதை பொதுமக்கள், தவெகவினர் கேட்டால், பெரிய கைகலப்புதான் உருவாகும் என்றும், ஒரு எம்எல்ஏ என்ன பேச வேண்டும் என உள்ளது, கடந்த ஆட்சியில் யாரும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசவில்லை எனவும், மாப்பிள்ளை, மகன், முதல்வரை ஏதேனும் சொன்னால் குண்டாஸ் போட்டனர் என கூறினார்.

மேலும், கைது சட்டப்படி நடைபெற்றுள்ளது, இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் கொலை மிரட்டல் விடுக்கம் வகையில் பேசினால் வழக்குகள் வரத்தான் செய்யும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரம் குறித்து அமைச்சர் கூறியது என்ன.?

தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்றும், இந்த தேர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு எதிரானது என்றும் கூறினார். இந்தத் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றும், அதில் மாற்றம் கிடையாது என்று கூறிய அவர், மத்திய அரசால் தான் அதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த முறை உதயநிதி ரகசியம் இருக்கிறது என்று சொன்னார், ஆனால், அது போன்று பொய்யான கருத்தையோ, வாக்குறுதியையோ எங்களால் சொல்ல முடியாது என்று கூறிய அமைச்சர், மத்திய அரசு தான் நீட் தேர்வை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். நீட் மாணவர்களுக்கு எதிரானது என்றும், ஒவ்வொரு ஆண்டும் குளறுபடி நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குளறுபடி காரணமாக ஆயிரக்கணக்கான தரமற்றோர் டாக்டர்கள் ஆகியுள்ளனர் என்றும், இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

Source: Read Full Article