புதுச்சேரி: “விஜய் ஆட்சியில் தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். “ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என விஜய் போல புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்ல தயாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வ. நாராயணசாமி, என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார். அவரது விரிவான செய்தியறிக்கை இதோ: “தமிழக முதல்வர் விஜய் போல் ரங்கசாமி கூறத் தயாரா?”“தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது. ஊழலை ஒழிக்கத் தமிழக முதல்வர் பல்வேறு உறுதியான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

‘ஊழல் செய்தால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும்’ எனத் தமிழக முதல்வர் விஜய் கூறுவதைப் போல, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறத் தயாரா?” என்று நாராயணசாமி சவால் விடுத்தார். மேலும், தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே இருந்த 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதைப் போல புதுச்சேரியிலும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஸ்தம்பித்து நிற்கும் புதுச்சேரி நிர்வாகம்:

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், “புதுச்சேரியில் தற்போதுள்ள 5 அமைச்சர்களின் பதவிக்காலமும் இலாகா இல்லாத ஜான்குமாரைப் போலவே முடிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடற்ற தனத்தால், புதுச்சேரிக்கு ஏன் ஓர் அமைச்சரவை என்ற கேள்வி எழுகிறது. வாக்களித்த மக்களுக்கு என்டிஏ கூட்டணியும், முதலமைச்சரும் மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். மாநிலத்தில் நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. கோப்புகளைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் தூங்குகிறார்கள். முதலமைச்சரைத் தவிர வேறு யாருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், புதுச்சேரி பாஜக ஏன் வாய்மூடி மௌனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. இதற்குக் கூட்டணிக் கட்சியான பாஜக தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

என்.ஆர். காங்கிரஸ் ‘அடிமைகளின் கட்சி’:

“என்.ஆர். காங்கிரஸ் என்பது ஒரு சிலரின் சுயநலத்திற்கான அடிமைகளின் கட்சி. அங்கு முதலமைச்சரைத் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. கூட்டாட்சித் தத்துவத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. முதலமைச்சர் செயல்படாவிட்டால் அதற்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த நிர்வாகமும் குட்டிச்சுவராகிவிட்டது. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன; கடந்த 5 மாதங்களாக ரேஷனில் அரிசி போடப்படவில்லை. எப்போது அரிசி வழங்கப்படும் என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” எனக் குற்றம் சாட்டினார். போலி மருந்து விவகாரம் & ஆளுநருக்குக் கண்டனம்:புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில், புதுச்சேரி அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், இதனை வலியுறுத்திக் காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமியைக் காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரரான பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு ஆளுநர் களங்கம் விளைவிக்கக் கூடாது. காமராஜர் என்ன ரெஸ்டோ பார்களுக்கு உரிமம் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினாரா? அல்லது பள்ளி, கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளைக் கொண்டு வந்தாரா? ஆளுநர் கைலாஷ் நாதன் தனது கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்க வேண்டும், அவரது கண்ணாடியில்தான் கோளாறு உள்ளது” என்று காட்டமாக விமர்சித்தார்.

பழநி விவகாரம் மற்றும் பிரதமரைச் சந்திக்காதது குறித்த கேள்வி:அயோத்தி விவகாரம் குறித்துப் பேசும் நீங்கள், பழநி விவகாரம் பற்றிப் பேச மறுப்பது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பழநி விவகாரத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று 75 நாட்களாகியும் நாட்டின் பிரதமரைச் சந்திக்காத என்டிஏ அரசின் முதல்வர் ரங்கசாமி, தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை மட்டும் அடிக்கடி சந்திப்பது ஏன் என்ற கேள்விக்கு, “அதை அவரிடம்தான் (ரங்கசாமியிடம்) கேட்க வேண்டும்” என்று கூறி நாராயணசாமி தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.

Source: Read Full Article