அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கி, பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கிய போராளிக் குழுவான "ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு", அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கான சன்மானத்தை அறிவித்துள்ளது. ஜூலை 17, அதாவது இன்று, ஈரான் ஆதரவு பெற்ற இந்தக் குழு, ட்ரம்பின் கொலைக்காக 10 மில்லியன் டாலர் (சுமார் 85 கோடி ரூபாய்) சன்மானத்தை அறிவித்தது.

எதற்காக இந்த அறிவிப்பு.?

ஈராக்கிய குழுவின் கூற்றுப்படி, 2020-ல் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈராக், சிரியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானம், ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இந்த ஆயுதக் குழுக்கள் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ட்ரம்ப் ஒரு கொலையாளி. மற்றவர்களை கொல்லவோ அல்லது அமைப்புகளை கலைக்கவோ அவர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். எனவே, அவரது மரணத்துக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

"காசிம் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் கொன்றதன் மூலம், ட்ரம்ப் உலகளாவிய பாராட்டை பெற்றார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஈரானிய பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் காசிம் அல்-ஜைதியுடனான சந்திப்பின்போது, 2020 ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பகிரங்கமாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது.

ட்ரம்ப் கூறியது என்ன.?

அந்த சந்திப்பின் போது, சுலைமானி மற்றும் முஹந்திஸைக் கொன்ற நடவடிக்கையை ட்ரம்ப் நியாயப்படுத்தினார். அஷர்க் அல்-அவ்சாத் என்ற அரபு செய்தி நிறுவனத்தின்படி, "எனது முதல் பதவிக்காலத்தில் நான் அவர்களை (சுலைமானி மற்றும் முஹந்திஸ்) கொன்றேன். நான் அதை செய்யாமல் இருந்திருந்தால், இன்றைய நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். ஈரானிய தலைவர்கள் சுலைமானிக்குப் பயந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப்பை கொல்ல ஏற்கனவே நடந்த முயற்சிகள்

2024 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்ப்பை கொலை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2024 ஜூலை 13-ம் தேதி அன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது, ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு ட்ரம்பின் காதை உரசிச் சென்று, மயிரிழையில் தவறவிட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே, அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர், சுலைமானியின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானுடன் தொடர்புடைய ஒரு குழு ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

Source: Read Full Article