மாஜி அமைச்சர்களுக்கு குறி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக மாஜி அமைச்சர்களை குறிவைத்து அடுத்தடுத்து வழக்கு பதியப்பட்டு வருகிறது. அந்த வகையில், எ.வ.வேலு, சிவசங்கர், தா.மோ அன்பரசன் என அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த ஆட்சி காலத்தின் போது அமைக்கப்படாத சாலைக்கு, சாலை அமைத்தாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜூன் 25 ஆம் தேதி எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எ.வ.வேலுவிற்கு சம்மன்

இதனைடுத்து நேரில் விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருப்பதாகவும், சென்னை திரும்பியதும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதாக எ.வ.வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி செல்லக்கூடாது என்ற வகையில் எ வ வேலு சிங்கப்பூர் சென்ற நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர்.

இந்த லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து எ.வ.வேலு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனைக்காக எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு எ வ வேலு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

எ.வ.வேலுவிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

இதனையடுத்து நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சூரியகாந்தி முன்பு தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆனால் நாளைய தினம் வழக்கை விசாரணை செய்ய தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில் எ.வ.வேலு வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ்க்கு தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றமும் வழக்கை உடனடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்திருப்பது தவெக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article