அதிமுகவில் உட்கட்சி மோதல்

சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக திராவிட கட்சிகளான திமுக, அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்து இந்த இரண்டு கட்சிகளையும் அலறவைத்துள்ளது.

அதிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சிக்கி சிதறி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், 25 எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதிலும் அதிமுக மூத்த நிர்வாகிகளாக இருந்த தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு ஆதரவாக 27 எம்எல்ஏக்கள் இருந்ததால் அதிமுக தனி அணியாக உருவாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அடுத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், மற்ற 21 எம்எல்ஏக்கள் வேறு வழியில்லாமல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுகொண்டனர். ஆனால் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 33 பேரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். அதே நேரம் மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக அலங்கார பதவிகளான மாநில பொறுப்புகளை மட்டுமே வழங்கினார்.

பொதுச்செயலாளர் பதவி- சட்ட விதிகள் மாற்றம்

இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என நிராகரித்து வருகிறார்கள். இதற்கிடையே அதிமுகவில் கடந்த 2021ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளார நியமிக்கவும், வேறு யாரும் இடையில் வந்து விடக்கூடாது என தங்கமணி, வேலுமணி,சி.வி.சண்முகம் ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாக கொண்டு வந்த அதிமுக தேர்தல் சட்ட விதிகள் அவர்களுக்கே தற்போது ஆப்பாக மாறியுள்ளது. இந்த சட்ட விதிகள் காரணமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அகற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்தது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர திட்டமிட்டனர். எனவே வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாத வகையில் அதிமுகவில் தேர்தல் சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தனர்.

பொதுச்செயலாளரை மாற்ற சட்ட விதிகள்

அந்த வகையில் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளரை அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் 10 மாவட்ட செயலாளர் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே அதிகாரத்தில் இருப்பவரால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் நிலை உருவானது.

அந்த வகையில் தன்னை எதிர்த்த மாவட்ட செயலாளர்களை நீக்கி தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளதால் எஸ்.பி.வேலுமணி அணியினர் தவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியே தானாக விருப்பப்பட்டு பதவி விலகினால் மட்டுமே அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே எஸ்.பி.வேலுமணி அணி என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

Source: Read Full Article