தமிழகத்தில் அரசியல் மாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆனால் 108 தொகுதிகளில் மட்டுமே தவெக பிடித்த காரணத்தால் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை தக்கவைத்தது.

அதிமுக டூ தவெக

இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என திட்டம் போட்ட அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவியை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு தவெகவில் இணைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எம்ஆர் பாஸ்கர் சர்ச்சை கருத்து

அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெக விலைக்கு வாங்கி விட்டதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் சபாநாயகர் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது தொடர்பாக கூறுகையில், தவெகவில் இருந்து எங்களை அணுகினார்கள்.அது எங்களுக்கு பிடித்திருந்தது இதனால் தவெகவில்இணைந்து விட்டோம் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு மூலம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து வருகிறது.

மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக

அந்த வகையில் கடந்த வாரம் தமிழக ஆளுநரை திமுக நிர்வாகிகள் சந்தித்து தவெக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புகார் அளித்திருந்தனர். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையில் இல்லாத தனி நபர்கள் 2 பேர் கலந்து கொண்டதாகவும், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளைய தினம் திமுகவினர் மீண்டும் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மூலம் தவெகவிற்கு இழுக்கப்பட்டது தொடர்பாக புகார் தெரிவிக்கவுள்ளனர். மேலும் தவெகவில் எம்ஆர் விஜயபாஸ்கர் இணைய தங்களிடம் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமர்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே திமுகவினர் புகார் மீது தமிழக ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article