தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.6.14 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை தொகுப்பு திட்டத்தில் அரசு வழங்கும் மானியத்தை பெற விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு, குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வந்தனர்.

ஆனால், இந்த மானியத் தொகையை பெறுவதற்காக விண்ணப்பம் அளிக்கும் விவசாயிகளிடம், சில அதிகாரிகள் ஒருவருக்கு ரூ.500 வீதம் லஞ்சம் கேட்டு வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஒரத்தநாடு வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அதிகாரிகளின் வருகையை கண்டதும், அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பாளர் தனது வசம் இருந்த ரூ.79 ஆயிரம் ரொக்கத்தை பதற்றத்தில் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த போலீசார் அந்த பணத்தை உடனடியாக கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிய வேளாண் அலுவலர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் மேஜைகள், அலமாரிகள் உள்ளிட்ட இடங்களில் விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ.5,35,150 ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம், மொத்தமாக ரூ.6,14,150 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மாலை தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்ததுடன், அதிகாரிகளிடம் விடிய விடிய விசாரணையும் நடத்தப்பட்டது. அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விண்ணப்பப் பதிவுகள் மற்றும் கணக்கு விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு விவசாயிகளின் நலனுக்காக வழங்கும் மானியத் திட்டங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவில் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள், தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத அளவிலான கடுமையான விவசாய நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் காவிரியில் போதிய தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததாலும், டெல்டா மாவட்டங்களின் பிரதான சாகுபடியான 'குறுவை சாகுபடி' முற்றிலும் பொய்த்துப் போய் உள்ளது.

விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு இயற்கையும் வஞ்சித்தது, அண்டை மாநில நீர் விவகாரமும் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. "காவிரியில் தண்ணீர் வரும் என்று நம்பி, நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் குறுவை சாகுபடியைத் தொடங்கினோம். ஆனால், தண்ணீர் வராததால் வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன; நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன," என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் குறுவை மானியம் பெற அதிகாரிகள் லஞ்சம் பெறுவது் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ோல் உள்ளது என்று தெரிவித்தனர்.

Source: Read Full Article