தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை நேரில் சந்தித்து காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேசவுள்ளார். இதனைத் தமிழக வேளாண் அமைச்சர் வினோத் உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தலைவலியாக அமையும் பிரச்னை

தமிழ்நாட்டிற்கு காலம் காலமாகவே அண்டை மாநிலங்களால் பிரச்னை நிகழ்ந்து வருகிறது. ஒருபக்கம் கர்நாடகா மாதந்தோறும் தர வேண்டிய காவிரி நீரை தராமல் இழுத்தடித்து வருகிறது. அதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என செயல்பட்டு வருகிறது. இவ்விரு பிரச்னைகளும் தமிழ்நாட்டிற்கு தலைவலியாக அமைந்துள்ளது. இதனை தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை சட்ட நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசும் அதனை தொடர்ந்து வருகிறது.

டி.கே.ஷிவக்குமாரை சந்திக்கும் விஜய்

இப்படியான சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்லவுள்ளார். பெங்களூருவில் அம்மாநில முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை அவர் சந்திக்க உள்ளதாக அமைச்சர் வினோத் உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதலமைச்சர் செல்லவுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அது தமிழ்நாட்டின் உரிமை என சொல்லி வருகிறோம். அதை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் தான் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் நம் உரிமைக்காக முதலமைச்சர் விஜய் அதனைக் கேட்டுப் பெறுவார் என தெரிவித்துள்ளார்,

முதலமைச்சர் முடிவுக்கு வரவேற்பு

இந்த நிலையில் ஊடகத்திடம் பேசிய காவிரி பாசன விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளங்கீரன், “முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது கர்நாடகா முதல்வராக குண்டுராவ் இருந்தார்.

அவர் அளித்த மதிய விருந்தை கூட ஏற்க மறுத்த எம்ஜிஆர், என் தமிழக மக்கள் தண்ணீர் இல்லாமல் வாடுகிறார்கள். அதனைக் கொடுங்கள் என சொன்னார். அது உணர்வு ரீதியாக கர்நாடகா மக்களுக்கும், முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்தது போல இருந்தது. அந்த வகையில் விஜய் செயல்படுகிறார். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களும் இந்த மாதிரியான அணுகுமுறையை கையாளவில்லை. கர்நாடகா அரசு நீதிமன்றம் சொல்லியும் தண்ணீர் திறக்கவில்லை. முதலமைச்சர் சொல்லி நடக்குமா என்றால் அது சந்தேகம் தான். இருந்தாலும் இந்த முயற்சியை வரவேற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article