தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தையில் கடைகள் ஒதுக்கீடு மற்றும் சந்தை ஏலம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை கோரியுள்ளனர்.

பேராவூரணியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக புதிய வாரச்சந்தை வளாகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த சந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய சந்தையில் கடைகள் ஒதுக்கீடு மற்றும் வாரச்சந்தை ஏலம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், புதிய சந்தையின் முன்புறத்தில் அமைந்துள்ள கடைகளை ஒதுக்குவதற்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரச்சந்தை ஏல நடைமுறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, சில அரசியல் தலையீடுகள் காரணமாக தற்போது கடைகளை உடனடியாக ஒதுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர், முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். மெய்யநாதனுக்கு ஆறு கடைகள் ஒதுக்க வேண்டும் என்று கூறி வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகிகளுடன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகளும் தலையிட்டு, வியாபாரிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, கடைகள் ஒதுக்கீடு மற்றும் சந்தை ஏல நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து, அரசு நிர்ணயித்த கட்டணப்படி மட்டுமே வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தினர்.

மேலும், புதிய வாரச்சந்தையில் நீண்டகாலமாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.எஸ். மூர்த்தி கூறுகையில், "புதிய சந்தை அனைத்து வியாபாரிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஆனால், கடைகள் ஒதுக்கீட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல்கள் கிடைப்பது கவலைக்குரியது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உண்மை நிலையை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து, வெளிப்படையான முறையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்.

பேராவூரணியில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாத நிலையில் அதன் பூட்டை உடைத்து வியாபாரிகள் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரச்சினைக்கு பின்னணியில் அரசியல் உள்ளது என்று எழுந்துள்ள புகார் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வாழ்வாதாரமாக விளங்கும் வாரச்சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டிய பின்னரும் கடைகள் ஒதுக்காமல் திறப்பு விழாவும் நடத்தாமல் இருந்ததால் வியாபாரிகளும், விவசாயிகளும் பொங்கி எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article