தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வபோது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?

எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article