தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையும் கிடைக்காத சூழலில், திமுக தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார் என்ற தகவல் அப்போது தீயாக பரவியது.

எஸ்பி வேலுமணி பகிரங்க குற்றச்சாட்டு:

இது வதந்தி என திமுக தரப்பில் வாதம் செய்தாலும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திமுக கூட்டணி தலைவர்கள் சிலர் திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்தது உண்மை என்று உறுதியாக தெரிவித்தனர். இந்த விவகாரம் அடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கடிதம் எழுதிய எஸ்பி வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் இந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு மூலமாக மீண்டும் திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக மற்றும் அதிமுக தமிழ்நாட்டை மாறி, மாறி கடந்த அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வந்த நிலையி், திடீரென புதிய கட்சி ஒன்று ஆட்சிக்கட்டிலில் அமர்வதை விரும்பாத காரணத்தாலே எதிரிகள் இருவரும் கரம் கோர்த்தனர் என்றும் சிலர் விமர்சித்தனர்.

திமுக - அதிமுக கூட்டணி:

மக்கள் பெரும்பான்மையாக தவெக-விற்கு வாக்கு அளித்த நிலையில், அந்த முடிவை ஏற்க முடியாமலே மக்களின் முடிவுகளுக்கு எதிராக திமுக - அதிமுக கை கோர்க்க விரும்பியதாகவும் தவெக ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களும் குற்றம் சாட்டினர். திமுக - அதிமுக கூட்டணி விவகாரம் அதன்பின்பு அடங்கிய நிலையில், தற்போது எஸ்பி வேலுமணியும், அவரது ஆதரவாளர்களும் பகிரங்கமாக அந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

திமுக-விற்கு பின்னடைவு:

இது திமுக மற்றும் அதிமுக-விற்கு மீண்டும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. தவெக எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பரவி வரும் சூழலில், தற்போது திமுக அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்வைத்திருப்பது திமுக-விற்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

திமுக மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கும் இது பின்னடைவை உண்டாக்கியுள்ளது. அவரது தலைமையில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் அதிமுக தனது எம்எல்ஏ-க்களையும் தக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியிருப்பதும் அவருக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

Source: Read Full Article