தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மிக கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் கட்சி திமுக. அறிமுக கட்சியான தவெக-விடம் ஆட்சியை இழந்தது மட்டுமின்றி, அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார். இது திமுக-வினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இளைஞர்கள் மீது கவனம் செலுத்தும் திமுக:

தவெக-வின் வெற்றிக்கு இன்ஸ்டாகிராம் என்று பொதுவெளியில் திமுக கூறி வந்தாலும், களத்தில் திமுக-வினர் அலட்சியமாக பணியாற்றியதும், தேர்தல் சமயத்தில் ஒத்துழைப்பின்றி பணியாற்றியது என பல காரணங்கள் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு சென்றுள்ளது. இந்த தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள், முதல் தலைமுறையினர் வாக்குகள் தவெக-வின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதால் திமுக தங்களது கவனத்தை இளைஞர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

முதல் தலைமுறையினர், இளைஞர்களின் வாக்குகளை கவர வேண்டுமென்றால் கட்சிப்பொறுப்புகளிலும் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த தேர்தல் தோல்விக்கு கட்சியின் சீனியர்கள் பலரின் அலட்சியமும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய முடிவு எடுக்கப்போகும் மு.க.ஸ்டாலின்:

கடந்த தேர்தலிலே கட்சியில் மூத்தவர்களை காட்டிலும் இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரால் போட்டியிட வாய்ப்பு பெற்றவர்களின் தோல்விக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மு.க.ஸ்டாலின் கட்சியில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, கட்சியில் முக்கிய பதவியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஓரங்கட்ட முடிவு செய்துள்ளார். மேலும், கட்சியின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின்தான் என்பதால் கட்சியில் முடிவு எடுக்கும் அதிகாரம், நிர்வாகிகள் நியமனம் என பல்வேறு பொறுப்புகளை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க முடிவு செய்துள்ளார்.

ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?

துரைமுருகன் போன்ற கட்சியில் உள்ள மூத்த தலைவர்களிடம் பதவியில் இருந்து விலகவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் கைக்கு முழு அதிகாரமும் வந்த பிறகு அவரைப் போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு இளைஞர்கள் பட்டாளத்தை கட்சியில் கொண்டு வர உதயநிதியும் முழு மூச்சுடன் உள்ளார். கடந்த தேர்தல் தோல்விக்கு காரணமான மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே இருந்து வரும் சூழலில், தங்களது பொறுப்புகளை காப்பாற்றிக் கொள்ள சீனியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.

Source: Read Full Article