தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகிலுள்ள சரோஜ் நினைவகத்தில், 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி பாதிப்பு, காவிரி நீர், மேகதாது அணை, நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி குறித்து அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளது.

தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, விவசாயிகளின் வேளாண் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில், கூடுதல் வட்டி சுமை முழுவதும் விவசாயிகள் மீதே விழுகிறது. இந்த கூடுதல் வட்டியை அரசே ஏற்க வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், மற்ற விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சென்னை சென்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் பேசுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்புகளில் ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே, தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த முதலமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கோர முடிவு செய்துள்ளதாகவும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றால், சட்டப்பேரவை கூடும் நாளில் சென்னையில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசுகையில், கடந்த 13 ஆண்டுகளாக தமிழக விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கவில்லை என்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களும், மாநில அரசும் ஏற்றுக்கொண்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்தால்தான் அவர்கள் அடுத்த சாகுபடியை நம்பிக்கையுடன் தொடங்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், குறுவை சாகுபடி பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் நிவாரணமும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பற்றாக்குறை காலங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உரிய காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானமும் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், எண்ணெய் பனை விவசாயிகள் சங்கம், ஏரி பாசன விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை, தமிழக உரவர் மன்றம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு விரைந்து முடிவு எடுத்து, தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

Source: Read Full Article