6 கிராம் தங்க செயின் பறிப்பு

கள்ளக் குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி ( வயது 22 ) இவர் சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் இரவு பணி முடித்து கடந்த 07.10.2025 அன்று நண்பகல் விடுதியில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது , அங்கு முகமூடி அணிந்த நபர் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு , அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து விடுதியின் உரிமையாளர் இளங்கோவன் என்பவர் ராமாபுரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சின்ன போரூர் பகுதியை சேர்ந்த தனசேகர் ( வயது 30 ) என்பவரை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

ஆண் நண்பரை அழைத்த இளம்பெண்

மேலும் , வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக ராமாபுரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து , மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த தி.நகர் பகுதியை சேர்ந்த ராதிகா ( வயது 28 ) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் ,ராதிகா மேற்படி பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் , சம்பவத்தன்று உடன் தங்கியிருந்த சிவரஞ்சனியிடம் தங்கச் செயினை ஒயர் கட்டர் மூலம் கட் செய்து திருட முயற்சி செய்து , தங்கச் செயினை எடுக்க முடியாததால் , ராதிகா அவரது ஆண் நண்பர் தனசேகர் என்பவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து , தங்கச் செயினை பறித்து சென்றுள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ராதிகா, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article