அரசு சான்றிதழ்கள் - நிர்வாக நடைமுறை எளிமை

பொதுவான ஜாதி சான்று , வருவாய் , இருப்பிட சான்று போன்ற குறிப்பிட்ட சில வகை சான்றிதழ்கள் வழங்குவதில், நிர்வாக நடைமுறையை எளிமைப்படுத்த, வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசின் நல திட்டங்களில் பயன் பெற , கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர, பல்வேறு வகை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, வருவாய் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, முதல் திருமணம் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று போன்றவற்றுக்கு , வருவாய் துறையை மக்கள் நாடுகின்றனர்.

இந்த சான்றிதழ்கள் விரைவாக கிடைத்தால் மட்டுமே, அவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். இதை எளிமைப்படுத்த, இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்தது.

மூன்றடுக்கு ஆய்வு

இவ்வாறு இ - சேவை மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு செல்லும், அவர் அதை ஆய்வு செய்து , வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவார். அதன் பின், அந்த விண்ணப்பம் , தலைமையிடத்து துணை தாசில்தார் அல்லது தாசில்தாருக்கு செல்லும். இதில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என, மூன்றடுக்கு ஆய்வு நடக்கிறது.

இந்த மூன்று கட்ட ஆய்வு நடைமுறை, 50 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய சூழலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டது. தற்போதைய சூழலை கருத்தில் வைத்து, இதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

தற்போதைய நடைமுறைகள், சூழல்கள் அடிப்படையில், சான்றிதழ்கள் வழங்குவதை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் அடிப்படையில், எஸ்.சி. - எஸ்.டி., அல்லாத பிற ஜாதி சான்றிதழ்கள், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் திருமணம் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்ற சில வகை சான்றிதழ்களில், வருவாய் ஆய்வாளர் தலையீட்டை தவிர்க்கலாம்.

கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பின் , அந்த விண்ணப்பம் நேராக தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு சென்றால், உடனடியாக சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.

தானியங்கி பட்டா மாறுதல் பணி எளிமைபடுத்தப்பட்டது போன்று, இந்த பணிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. வருவாய் ஆய்வாளர் ஆய்வு எந்தெந்த சான்றிதழ்களுக்கு தேவை என்பதை, வரையறை செய்து வருகிறோம். இதனால், வருவாய் ஆய்வாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், மக்களுக்கு விரைவாக சான்றிதழ்கள் கிடைக்கும் என இவ்வாறு அவர் கூறினார்

Source: Read Full Article