" தென்னை மட்டை பின்னும் தொழில் "

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி அவர் அவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

எனவே வயது முதிர்ந்த தம்பதியான இவர்கள் , இருவரும் மட்டும் வீட்டில் தனியா வசித்து வந்திருக்கின்றனர். மேலும் தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனியாக இருக்கும் இவர்களுக்கு அருகில் வசிக்கும் மகன் மாதேஷின் குடும்பத்தினர் உணவு அளித்து பராமரித்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக மாதேஷின் மகன் நவநீதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் , உள்ளே சென்று பார்த்த போது ஜெயராமன் மற்றும் அமராவதி இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நகைக்காக இரட்டை கொலையா ?

இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீவட்டிப்பட்டி காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் மற்றும் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, உயிரிழந்த அமராவதி அணிந்திருந்த காதணி மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் , நகைக்காக இந்த இரட்டைக் கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Source: Read Full Article