விழுப்புரம்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான கோடி கணக்கிலான நிலத்தை, மடத்தின் பெயரில் சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது வீட்டிற்குப் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

பழனி கோவில் நிலத்தை மடத்தின் மூலம் விற்று மோசடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலமானது, கடந்த 1888 ம் ஆண்டில் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவரால் தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது. இந்தத் தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வில்லங்கப்படுத்தவோ உரிமை கிடையாது. இது முழுக்க முழுக்கப் பொது அறக்கட்டளை சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் நகரப் பகுதியான சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியுடன் சேர்த்து, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மடம் ஒன்றையும் முருகதாஸ் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனி முருகன்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை, தனது மடத்தின் பெயரப் பயன்படுத்தி தனிநபர் ஒருவருக்கு முருகதாஸ் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். கோவில் நிலம் முறைகேடாக விற்கப்பட்டது குறித்து எழுந்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

வீட்டிற்குச் சீல் வைப்பு – போலீசார் அதிரடி:

சிபிசிஐடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழனி கோவில் நில மோசடியில் முருகதாஸுக்கு நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின்போது, பழனி நில விற்பனை தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் மற்றும் போலிப் பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மேல் விசாரணைக்காக முருகதாஸை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மேலும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படாமல் இருக்க, சாலாமேட்டில் உள்ள அவரது வீட்டிற்குப் போலீசார் முறைப்படி சீல் வைத்தனர்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஆன்மீக மடத்தின் பெயரால் பழனி கோவில் நிலத்தை மோசடி செய்து விற்ற வழக்கில் சிபிசிஐடி-யால் பிடிபட்ட சம்பவம் விழுப்புரத்திலும், கல்வித் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article