Impact of ABP Nadu's news: தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்திய செடிகள் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏபிபிநாடு செய்தி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே பூதலூரில் இருந்து சித்திரக்குடி – ஆலக்குடி வழியாக தஞ்சாவூரை இணைக்கும் முக்கிய சாலையில், சாலையை மறைத்து அடர்ந்து வளர்ந்திருந்த முட்செடிகள் மற்றும் காட்டுச் செடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஏபிபி நாடு வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதால், பல மாதங்களாக நீடித்து வந்த போக்குவரத்து சிக்கல் மற்றும் விபத்து அபாயம் தற்போது நீங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்தச் சாலை, தஞ்சாவூர் நகரை அடைய முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணியிடங்களுக்கும், விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் விவசாய விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் இந்தச் சாலை முக்கிய பங்கு வகிப்பதால், எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள், காட்டுச் செடிகள் மற்றும் புதர்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து வந்தன. குறிப்பாக கல்விராயன்பேட்டை பகுதியில் சாலையின் வளைவுகளை மறைக்கும் வகையில் செடிகள் பரவி இருந்ததால், எதிரே வரும் வாகனங்களை ஓட்டுநர்களால் முன்கூட்டியே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. குறுகலான சாலைப் பகுதிகளில் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே வந்தபோது விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்திருந்தது. முக்கியமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு வழிவிட சாலையோரமாக ஒதுங்கிச் செல்லும்போது, முட்செடிகளின் கூர்மையான கிளைகள் உடலில் உரசி காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், முட்செடிகள் தெரியாமல் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிலர் செடிகளைத் தவிர்க்க முயன்று வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்தப் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நீண்ட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சாலையின் ஆபத்தான நிலையை எடுத்துக்காட்டி ஏபிபி நாடு விரிவான செய்தி வெளியிட்டது. செய்தி வெளியானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக களமிறங்கி, சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் கல்விராயன்பேட்டை பகுதியில் சாலையை மறைத்து வளர்ந்திருந்த முட்செடிகள் மற்றும் காட்டுப் புதர்களை இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர்.

முட்செடிகள் அகற்றப்பட்டதால் தற்போது சாலையின் வளைவுகள் தெளிவாகக் காட்சியளிக்கின்றன. எதிரே வரும் வாகனங்களை தொலைவிலிருந்தே ஓட்டுநர்கள் எளிதாகக் காண முடிவதால், விபத்து அபாயம் வெகுவாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தற்போது இந்தச் சாலையில் நிம்மதியாக பயணம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு காரணமான ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கும், உடனடியாக பணிகளை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இத்தகைய பராமரிப்புப் பணிகள் புகார் வந்த பிறகு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாலையோரங்களில் மீண்டும் முட்செடிகள் வளராமல் இருக்க வழக்கமான ஆய்வுகளை நடத்த வேண்டும். வளைவுகள், பாலங்கள் மற்றும் குறுகலான பகுதிகளில் அடர்ந்த செடிகளை அவ்வப்போது அகற்றி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி வெளியீட்டின் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பது ஊடகங்களின் சமூகப் பொறுப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் இதுபோன்ற விரைவான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article