தஞ்சாவூர்: தஞ்சை அருகே களைகட்டும் மாட்டுச் சந்தையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாட்டுச்சந்தையில் வாரந்தோறும் 500 மாடுகள் வரை விற்பனையாகிறது. குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்பனை நடக்கிறது.

தஞ்சாவூர் அருகே 8.கரம்பை பைபாஸ் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வரும் மாட்டுச் சந்தை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய வர்த்தக மையமாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் 150 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது வாரந்தோறும் 400 முதல் 500 மாடுகள் வரை விற்பனையாகி வருவது இந்த சந்தையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு உறுதுணை

"நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும்" என்ற கிராமப்புற மக்களின் பழமொழி இன்றும் உண்மையாகவே இருப்பதை இந்த மாட்டுச் சந்தை உணர்த்துகிறது. விவசாயம் மட்டுமே வருமானமாக இல்லாத காலங்களில், மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் கிராமப்புற குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கின்றன.

பால், கன்று, உரம், இனப்பெருக்கம், உழவுப் பணி என பல்வேறு வகைகளில் வருமானம் ஈட்டித் தருவதோடு, அவசர தேவைகளின் போது கால்நடைகளை விற்று உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் இருப்பதால், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கையான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு புதிய உயிர் பெற்ற சந்தை

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச் சந்தை செயல்பட்டு வந்தது. ஆனால் சுகாதார வசதிகள் இல்லாததாலும், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் அந்த சந்தை செயல்படாமல் போனது. இதனால் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. போக்குவரத்து செலவு மற்றும் நேர விரயம் காரணமாக விவசாயிகளும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளுடன் தனியார் இடத்தில் புதிய மாட்டுச் சந்தை தொடங்கப்பட்டது. தற்போது இந்த சந்தை டெல்டா மாவட்டங்களின் முக்கிய கால்நடை வர்த்தக மையமாக வளர்ந்து வருகிறது.

பக்கத்து மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வருகை

இந்த மாட்டுச் சந்தைக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு முதலே லாரிகள் மூலம் மாடுகள் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுடன் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் நாட்டு மாடுகள், கறவை மாடுகள், உழவு மாடுகள் மற்றும் காளைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மாடுகளின் தரம், வயது, இனத்தைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. நல்ல இன கறவை மாடுகள் மற்றும் உழவு மாடுகளுக்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை முதல் சுறுசுறுப்பு

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதலே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு வரத் தொடங்குகின்றனர். மாடுகளை பார்வையிட்டு விலை பேசி வாங்கும் காட்சிகள் சந்தை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மாடுகள் காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் விற்பனையாகி விடுவதால், சந்தை அதிகாலை நேரத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

விவசாயி விஜயகுமார் கருத்து

8.கரம்பை பகுதியைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறுகையில், "வாரந்தோறும் நடைபெறும் இந்த மாட்டுச் சந்தைக்காக வியாழக்கிழமை இரவு முதலே பல மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்படுகின்றன. தஞ்சை மாவட்ட விவசாயிகள் தங்கள் மாடுகளை எளிதாக விற்பனை செய்யவும், புதிய மாடுகளை வாங்கிச் செல்லவும் இந்த சந்தை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விவசாயம் இல்லாத காலங்களில் குடும்பத்தின் வருமானத்திற்கு கால்நடை வளர்ப்பே பெரும் ஆதாரமாக உள்ளது. அதனால் இந்த மாட்டுச் சந்தை எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது" என்றார்.

கிராமப்புற பொருளாதாரத்தின் இதயத் துடிப்பு

தஞ்சை டெல்டா பகுதியில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதிலும், விவசாயிகளுக்கு நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதிலும் 8.கரம்பை மாட்டுச் சந்தை முக்கிய பங்காற்றி வருகிறது. இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து, விவசாயிகளுக்கும் வாங்குபவர்களுக்கும் நேரடி விற்பனை நடைபெறுவதால், இருதரப்பினரும் பயனடைவதாக தெரிவிக்கின்றனர்.

வாரந்தோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் விற்பனையாகும் இந்த மாட்டுச் சந்தை, தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு புதிய உயிர் ஊட்டும் வர்த்தக மையமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article