தஞ்சாவூர்: தஞ்சை மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் பெரும்பாலான இடங்களில் செயல்படாமல் காட்சி பொருளாக மாறியுள்ளன.

இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, உடனடியாக அனைத்து சிக்னல்களையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெரிசலால் அவதிப்படும் மக்கள்

தஞ்சை மாநகரின் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினமும் போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் முறையாக செயல்பட்ட சிக்னல்கள், போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பெரும்பாலும் செயலிழந்த நிலையில் உள்ளன.

8 முக்கிய இடங்களில் சிக்னல்கள் செயலிழப்பு

தஞ்சை மாநகரில் பெரிய கோவில், ரயிலடி, பழைய பேருந்து நிலையம், சோழன் சிலை, மேம்பாலம், புதிய பேருந்து நிலையம், ராமநாதன் ரவுண்டானா, தொம்பன்குடிசை உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றில் பெரும்பாலான சிக்னல்கள் ஒளிராமல் இருப்பதால், அவை வெறும் காட்சி பொருளாக மட்டுமே காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தாங்களாகவே சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகி, அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

'ஸ்மார்ட் சிட்டி'... ஆனால் சிக்னல்கள் 'ஸ்டாப்'

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நகரின் அடிப்படை போக்குவரத்து வசதியான சிக்னல்கள் செயல்படாதது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து போலீசாரும் சிக்னல் சந்திப்புகளில் பணியில் இல்லாததால், வாகனங்கள் விதிமீறி செல்வதும், சாலையை கடக்கும் பொதுமக்கள் ஆபத்தில் சிக்குவதும் தொடர்கிறது.

100-க்கும் மேற்பட்ட விபத்துகள்

தஞ்சை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையை மாற்ற, செயல்படாத அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் உடனடியாக சீரமைத்து, வழக்கம்போல் இயங்கச் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் மாநகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போலீசாரின் முக்கிய அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்க வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்றும், அத்தகைய விதிமீறலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாத நிலையும் ஏற்படும் என்பதால், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தஞ்சை மாநகரில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய, செயலிழந்த சிக்னல்களை உடனடியாக சீரமைத்து, போக்குவரத்து மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article